மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் விஷேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கந்தசாமி பிரபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்யன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது.
இதன் போது வவுணதீவு பிரதேச செயலகத்திக்குட்பட்ட பிரதேசங்கள் தொடர்பான விளக்கங்களையும் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பிரதி திட்டமிடல் பணிப்பாளரினால் தெளிவுபடுத்தினர்.
பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட வேண்டியதன் முக்கியத்துவம் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுன், பிரதேசத்தில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் அவற்றைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்பாக ஆராயப்பட்டது.
அதனை தொடர்ந்து சேதமடைந்துள்ள பாலங்கள் மற்றும் அவசரத் தேவையாக அமைக்கப்பட வேண்டிய பாலங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
இந் நிகழ்விற்கு மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





