மட்டக்களப்பில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம் -வவுணதீவில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலினால் - அச்சத்துடன் பரிதவிக்கும் மக்கள்!








மண்முனை மேற்கு  பிரதேச  செயலக பிரிவிற்குட்பட்ட  வவுணதீவு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாந்தீவில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருக்கும் காட்டு யானைகள் வவுணதீவு, மங்கிக்கட்டு ஆகிய பகுதிகளிற்குள்  (31)  இரவு வேளையில்  உட்புகுர்ந்ததனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன்  குறித்த யானைகளை அப்பகுதிகளை விட்டு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக தமது பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகள் அறுவடைக்கு தயாரான நிலையிலிருக்கும் தனது வேளாண்மையை துவம்சம் செய்து நாசப்படுத்துவதுடன், மக்கள் குடியிருப்பு பகுதியிலும் உட் புகுந்து சேதங்களையும் விளைவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பத்து நாட்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள வேளாண்மையையே குறித்த யானைகள் நாசப்படுத்தி வருவதுடன், 
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கடன்பட்டு வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் காட்டு யானைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இரவு நேரங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மீனவர்களும் மாந்தீவில் இருந்து நீந்திவரும் யானைகளினால் வெகுவாக பாதிக்கப்படுவதுடன், மீன்பிடியில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது வேளாண்மை அறுவடைக்குத் தயாராகி வருவதால் காட்டு யானைகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுவதுடன், மாந்தீவு பிரதேசத்தில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டமொன்று பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது என்பதுடன் குறித்த யானைகளினால் திருப்பெருந்துறை பகுதி மக்களும் அச்சத்தில் வாழ்ந்து வருவதுடன் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக காட்டு யானைகளின் அழிவுகளிலிருந்து விவசாய செய்கைகளைப்பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்