பாணந்துறை - நல்லூருவ காலி வீதியில் அமைந்துள்ள சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 வயதுடைய 5 சிறுவர்களும், 16 வயதுடைய ஒரு சிறுவனுமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் சென்ற சிறுவர்கள் கொழும்பு 02, புவக்பிட்டிய, பொல்கஸ்ஓவிட்ட, நுகேகொடை, கொட்டாவ மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 3.50 மணிக்கும் இன்று நள்ளிரவு 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தின் காப்பாளர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(25) மதியம் வரை அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவின் அறிவுறுத்தலின் கீழ், பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





