உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வு

 


 

 உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 02 வரை இலங்கையில் நடைபெற உள்ளன. 

அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 

1966 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது. 

தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு நவம்பர் 29 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.