கிழக்கு பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்கள் வதியும் 200 அறைகள் கொண்ட மாணவர் விடுதி அமையும்! பாராளுமன்ற உறுப்பினர் பிரபுவின் ஏற்பாட்டில் பிரதமர் 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 






கிழக்கு பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்கள் வதியும்  200 அறைகள் கொண்ட  பாரிய மாணவர் விடுதி அமைக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின்படி, 
 இதற்காக பிரதமர் ஹரிணி அமர சூரிய 515 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.


வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக  வளாகத்தில் கல்வி கற்கும் அனைத்து வெளிப்பிரதேச மாணவர்களுக்கும் தங்கி இருந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவு போதுமான விடுதி வசதிகள் இன்மையால்,  மாணவர்கள் அருகில் உள்ள தனியார் தங்கும் இடங்களை பணம் கொடுத்து பெற்று மிகுந்த சிரமங்களை அனுபவித்தவர்களாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் . இது நீண்ட கால பிரச்சினையாக இருந்தது.

மாணவர்களின் இந்த அவல நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு ,   பிரதமரும்,  கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின் கவனத்திக்கு கொண்டு சென்று விடுதி ஒன்று அமைப்பதன் அவசியம் குறித்து வேண்டிக்கொண்டு முயற்சிகளை முன்னெடுத்தார்.

அதன் பலனாக தற்போது சுமார் 515 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் ஒவ்வொரு அறைகளும் தலா 2 மாணவர்கள் தங்கி இருக்கத்தக்கதாக மொத்தமாக 200 அறைகளை கொண்டு அமைய உள்ளதுடன்  400 மாணவர்கள் இதனூடாக நேரடி பயனடையும் வகையில் குறித்த விடுதி கட்டடம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும்,  தூரப்பிரதேச மாணவர்களுக்கு பெரும் ஆறுதலாக இது அமையும் என்றும் இதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)