இலங்கையில் 30 முதல் 50 வயதுக்கு
இடைப்பட்ட நபர்களிடையே பெருங்குடல் மற்றும் நேர்க்குடல் புற்றுநோய்கள்
(Colon and Rectal Cancers) அதிகரித்து வருவது குறித்து சுகாதார அதிகாரிகள்
கவலை வெளியிட்டுள்ளனர்.
இது ஒரு உலகளாவிய போக்கின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னர் 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே
அதிகமாகக் காணப்பட்ட இந்தப் புற்றுநோய் பாதிப்புகள், அண்மைக்கால
தரவுகளின்படி இளம் வயதினரிடையே கணிசமாக அதிகரித்து வருவதை
வெளிப்படுத்துகின்றன.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய
புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் சமூக மருத்துவ விசேட நிபுணர் மருத்துவர்
ஹசரலி பெர்னாண்டோ, இந்த புதிய மாற்றமானது பொது சுகாதாரத்திற்கு ஒரு பாரிய
சவாலாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த அச்சுறுத்தலைக்
கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பக்கட்டப் பரிசோதனைகள், சரியான நேரத்தில் நோயைக்
கண்டறிதல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
ஆகியவை மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.





