அயலவர் வீட்டு மழைநீர் உங்கள் காணிக்குள் வருகிறதா? இது நீதி மன்றம் வரை செல்லக்கூடிய குற்றமா?



 சட்டத்தரணி 
குமாரசிங்கம் கம்ஷன் 

 
அயல் வீட்டுக்காரர் தனது வீட்டு கூரை நீரையோ அல்லது முற்றத்து தண்ணீரையோ உங்கள் வளவினுள் (காணிக்குள்) திருப்பி விடுகிறாரா?

"மழை பெய்தால் தண்ணீர் ஓடத்தானே செய்யும்" என்று அவர்கள் சாதாரணமாகச் சொல்கிறார்களா?

இலங்கையில் அயல்வீட்டாருடன் ஏற்படும் சண்டைகளில் 70% மழைநீர் மற்றும் எல்லை மதில் தொடர்பானவைதான். 

"மழை பெய்தால் தண்ணீர் ஓடித் தானே வரும்" என்ற மேலோட்டமான சாதாரண பேச்சுகளுக்குப் பின்னால் இருக்கும் பாரதூரமான சட்ட உண்மைகளை நீங்கள் அறிவீர்களா?

அவதானம் ! இது அயல்வீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல, பாரதூரமான சட்ட மீறல்!

இலங்கை சட்டம் என்ன சொல்கிறது? (Legal Facts in Sri Lanka)

இலங்கையில் நடைமுறையில் உள்ள Common Law (Roman-Dutch Law) மற்றும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களின்படி, ஒரு காணி உரிமையாளர் தனது காணியில் விழும் மழைநீரை கையாள்வதற்கு சில கடப்பாடுகள் உள்ளன :

01. செயற்கை திருப்பம் (Artificial Channeling): இயற்கை நீரோட்டத்தை மாற்றி, குழாய்கள் மூலமாகவோ அல்லது கூரை அமைப்பை (Gutters) உங்கள் காணியை நோக்கி வைப்பதன் மூலமோ நீரை விடுவது சட்டவிரோதமானது.

02. தனிப்பட்ட தொல்லை (Private Nuisance): அடுத்தவர் காணிக்குள் தேவையற்ற நீரை விடுவது ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை அமைதியாக அனுபவிப்பதைத் தடுக்கும் செயலாகும். இதற்கு எதிராக நட்டஈடு கோர முடியும்.

03. பிரதேச சபை/மாநகர சபை சட்டங்கள்: ஒவ்வொரு வீடும் கட்டப்படும்போது மழைநீர் வடிந்தோடும் முறை (Drainage Plan) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை மீறி நீரை அடுத்தவர் காணிக்குள் விடுவது நகரசபை விதிகளின்படி தண்டனைக்குரியது.

விவாதிக்கப்பட வேண்டிய உண்மைகள்!

1. மதில் சேதம்: தொடர்ந்து தண்ணீர் விழுவதால் உங்கள் வீட்டு மதில் அல்லது அத்திவாரம் (Foundation) பலவீனமடையலாம். இதற்கு அயலவரே பொறுப்பு!

2. நுளம்பு அபாயம்: அடுத்தவர் வீட்டு நீரால் உங்கள் காணியில் தண்ணீர் தேங்கி டெங்கு பரவினால், அதற்கு சட்டப்படி அவரே பொறுப்பாளியாவார்.

3. வழக்காறு (Servitude): அண்ணளவாக 10 வருடங்களுக்கு மேலாக ஒருவர் உங்கள் காணிக்குள் நீரை விடுகிறார், நீங்கள் அதை எதிர்க்கவில்லை என்றால், பின்னாளில் அதைத் தடுப்பது சட்டப்படி கடினமாகிவிடும்!

இதற்கு என்ன தீர்வு?

#நேரடி பேச்சுவார்த்தை: முதலில் நாகரீகமாகப் பேசி, 'பீலிகள்' (Gutters) அல்லது வாய்க்கால் அமைக்குமாறு அறிவுறுத்துங்கள்.

#கிராம அலுவலர் (GN): பேச்சுவார்த்தை தோற்றால், உங்கள் பகுதி கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்து ஒரு விசாரணைக்கு அழையுங்கள்.

#பிரதேச சபை (Local Council): வீதி அல்லது வடிகால் அமைப்பு தொடர்பான சிக்கல் என்றால் பிரதேச சபை/மாநகர சபை பொறியியலாளர் பிரிவில் முறைப்பாடு செய்யுங்கள்.

#பொலிஸ் முறைப்பாடு: அமைதிக்கு பங்கம் விளைந்தால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்.

தீர்வைப் பெறுவது எப்படி? (அதற்கான படிமுறை விளக்கம்)

படி 01: சிநேகபூர்வமாகப் பேசி 'பீலி' (Gutter) அல்லது வாய்க்கால் அமைக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.

படி 02: அவர் கேட்காவிடில், உங்கள் பகுதி கிராம அலுவலரிடம் (GN) எழுத்துமூலம் முறைப்பாடு செய்யுங்கள். அவர் இரு தரப்பையும் அழைத்து "சமாதான விசாரணை" நடத்துவார்.

படி 03: அதுவும் சரிவராவிடில், பிரதேச சபை/நகர சபையின் பொறியியலாளர் (Technical Officer) பிரிவில் முறைப்பாடு செய்யுங்கள். சட்டவிரோத கூரை அமைப்புகளை அகற்ற அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

படி 04: இறுதி முயற்சியாக சமாதான சபையிலோ (Mediation Board) அல்லது நீதிமன்றத்திலோ வழக்குத் தொடரலாம்.