இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 


இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் மனநல விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். 

60 அல்லது 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களே இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இலங்கையில் முதியோர் சனத்தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

முதியோர்களிடையே காணப்படும் மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளைச் சாதாரண வயோதிப நிலை என எண்ணி சமூகம் அலட்சியப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இன்று உலகம் எதிர்கொள்ளும் பாரிய சுகாதாரப் பிரச்சினையாகத் தனிமை காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. 

இலங்கையில் இளைஞர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதால், நாட்டில் தங்கியுள்ள முதியோர்கள் இந்தத் தனிமையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். 

முதியோர்களிடையே மனநலப் பிரச்சினைகள் பரவுவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்துள்ளதாகவும், இதன் விளைவாக, உடல் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தமது பெற்றோருடன் அடிக்கடி தொலைபேசி அல்லது காணொளி மூலம் உரையாடுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

தனிமையைத் தவிர்க்க முதியோர்கள் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் மற்றும் சமூகத் தன்னார்வப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

அங்கொடை மனநல வைத்தியசாலையில் முதியோர்களுக்காக விசேட பிரிவுகள் மற்றும் தீகாயு எனப்படும் பகல்நேர சிகிச்சை மையம் போன்ற வசதிகள் தற்போது உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.