இலங்கையில் விண்ணை முட்டும் மரண ஓலம்; 25 நாட்களில் 155 பேர் உயிரிழந்துள்ளனர் .

 


2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த வீதி விபத்துக்களுடாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்ற போக்கை அவதானிக்க கூடியதாக உள்ளதென  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 சுற்றுலாக் காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலேயே அதிகூடிய விபத்துக்கள் பதிவாகுவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி  பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 

 வேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அடிப்படை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றத் தவறுதல், வீதிகளின் மோசமான நிலைமைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களினாலேயே விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 விபத்துக்களின் போது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிக பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் வீதி விபத்துக்கள் ஊடாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பதற்கு, போக்குவரத்துச் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.