2025 ஆம் ஆண்டில், இலஞ்சம் பெற்றதற்காக மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட 130 சோதனைகளின் போது இந்தக் கைதுகள் நடந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் பொலிஸ் அதிகாரிகள் ஆவர்.
மேலும், நீதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாற்றிய 11 நபர்கள், விவசாயம் மற்றும் பொது சேவைகள் துறையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூன்று பேர் மற்றும் பிரதேச சபைகளைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த ஆண்டு லஞ்சம் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், 2025 ஆம் ஆண்டில், ஆணையம் 153 நபர்களுக்கு எதிராக 115 வழக்குகளைப் பதிவு செய்து 69 வழக்குகளை முடித்து வைத்தது.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, வரை 8,409 முறைப்பாடுகளை பெற்றதாகவும், அவற்றில் 569 முறைப்பாடுகள் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் ஆணையம் வெளிப்படுத்தியது.
இதற்கிடையில், பொது சேவையில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க அனைவருக்கும் பொறுப்பு இருப்பதாக ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் ரங்கா திசாநாயக்க கூறினார்.





