கடந்த 10 ஆண்டுகளில் 16 முதல் 22
வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் பாரியளவில்
அதிகரித்துள்ளதாக தடயவியல் மனநல விசேட மருத்துவ நிபுணர் தாரக்க பெர்னாண்டோ
தெரிவித்துள்ளார்.
மனநல விஞ்ஞான நிறுவனத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு
காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நீதிமன்ற விசாரணைகளின் மூலம்
குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200
சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில்
நாட்டின் சிறைச்சாலைகள் 16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களாலேயே நிரம்பி
வழியும் என அவர் எச்சரித்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களிடம் ஆக்கபூர்வமான திறமைகள் உள்ளன.
முறையான அறிவியல் சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு மூலம் அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தடயவியல் மனநலப் பிரிவு இலங்கையில் அமைந்துள்ளது.
ஒரு குற்றத்தைச் செய்யும்போது நபரின்
மனநிலை எவ்வாறு இருந்தது, அவர்களால் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியுமா
மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்களை இப்பிரிவு
ஆராய்வதாகவும் தெரிவித்தார்.





