அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட முக்கிய அரச நிறுவகங்களில்,தமிழ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.அனர்த்த சூழ்நிலையில் முக்கிய நிறுவனங்களிடமிருந்து தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதில் நிலவும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மொழியில் தகவல்களை வழங்குவதற்கு தற்காலிகமாகவேனும் தமிழ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்டநிறுவனங்களில் தனிப்பட்ட ரீதியில் அல்லது உள்நோக்கம் கொண்டு தமிழ் அதிகாரிகளின் நியமனங்கள் புறக்கணிக்கப்படவில்லை. நியமனங்களின் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால்,அது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தப்படும். அத்துடன்,விசேட பதவி நிலைகளில் இவ்வாறான நெருக்கடி இருக்குமாயின் அது தொடர்பில் தங்களுக்கு தெரியப்படுத்தலாம்.அந்த வகையில், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றிலிருந்து தகவல்களை வழங்குவதற்கு தற்காலிகமாகவேனும், அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்





