மலையகத்தில் பேரிடர் முகாமைத்துவம் எவ்வாறு நகர்கிறது? மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைமை இணைப்பாளர் ஸ்ரீகாந்த் விளக்குகிறார்.

 




















வரலாற்றில் என்றுமில்லாதவாறு மலையகம் பேரிடரால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில்
மலையகத்தில் பேரிடர் முகாமைத்துவம் எவ்வாறு நகர்கிறது?

என்பது தொடர்பாக இலங்கையில் புகழ் பூத்த அரச சார்பற்ற நிறுவனமான மனித அபிவிருத்தி  தாபனத்தின் தலைமை இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் விளக்குகிறார்.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது மலையகத்தில் இருந்து பணிப்பாளரரும் பெருந்தோட்ட பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பிபி.சிவப்பிரகாசம் தலைமையிலான குழுவினர் ஓடோடி வந்து வடக்கு கிழக்கில்  லதரப்பட்ட அளப்பரிய  சேவைகளை செய்தனர். காரைதீவில் பிரதான அலுவலகத்தை நிறுவி பிராந்தியமெங்கும் இரவு பகலாக சேவை செய்தனர். அப்போது அதன் வடக்கு கிழக்கு மாகாண பிரதான இணைப்பாளராக அருஞ்சேவையாற்றியவர் திரு.பொன்னையா சிறிகாந்த் என்ற இளைஞர்.
சுமார் பத்து வருட காலம் மக்களோடு மக்களாக  பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள். குறிப்பாக காரைதீவிலே 165 தற்காலிக கொட்டில்கள், 35 நிரந்தர  வீடுகள்,  பாதிக்கப்பட்ட பாடசாலைகள் வைத்தியசாலை இயங்குவதற்கு தற்காலிக கொட்டில்கள் முன்பள்ளி பாடசாலைகளை அமைத்துக நிருவகித்து உபரணங்கள் மற்றும் போதிய உலர் உணவுப் பொருட்களை கட்டம் கட்டமாக  நேர்த்தியாக செய்து வந்தார்கள் . புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இனமத பேதம் இன்றி பாரிய அளவில் மூன்று வலயங்களில் பரிசுகள் வழங்கி தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். சிறுவர் மகளிர் மீனவர் விவசாயிகள் என துறைசார்ந்த அமைப்புக்களை ஏற்படுத்தி உரிமைகளையும் சேவைகளையும் பெற்றுக் கொடுத்தனர். மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். மலையகத்தில் செம்பனை போராட்டம் வெற்றி அளித்தது. இதற்காக மகளிரணித்தலைவி திருமதி எஸ். லோகேஸ்வரி முன்னின்று உழைத்தார். வேள்வி என்கின்ற மகளிர் உரிமை முன்னணியை ஆரம்பித்தார். அது இன்று வரை இயங்கி வருகிறது.

இவ்வாறான பாரிய நிறுவனத்தின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் அன்று முன்னெடுத்த இணைப்பாளர் திரு பொன்னையா ஸ்ரீகாந்த் அவர்கள் இன்று மலையகம் தொடர்பாக விளக்குகையில்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையானது தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களை நிர்கதியாக்கியுள்ளது. அரசாங்கம், அரச சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நலன் விரும்பிகள் மற்றும் வெளிநாட்டு அரசுகளும் பல்வேறு விதமாக இலங்கையின் நிலைமையை வழமைக்கு கொண்டுவர அயராது உழைத்து வருகின்றனர். 

மனித அபிவிருத்தி தாபனம் (HDO) இந்த அனர்த்தத்தின் தனது சேவைகளை 03 கட்டங்களாக கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, மொனராகலை மாவட்டங்களில் திட்டமிட்டு செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.
 முதலாவது மீட்பு நடவடிக்கைகள், இரண்டாவது நிவாரணமும் தற்காலிக வதிவிடங்களுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் மூன்றாவது நிரந்தரமான தீர்வுக்காக மீள்கட்டுமான அமைப்பை உருவாக்குதல் என்பனவாகும்.

மீட்பு நடவடிக்கைகள்
மனித அபிவிருத்தி தாபனம் (Hdo) அனர்த்தம் இடம்பெற்ற நாள் தொடக்கம் தாபனத்தின் கிராமமட்ட குழுக்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் சிறுவர் குழுக்கள் என்பவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க அரசின் மீட்பு குழுக்களுக்கு மிக கடினமான மலைப் பிரதேசங்களில் மக்கள் சிக்குண்டு உள்ளதை அறியப்படுத்தியுள்ளது. அதேபோன்று அவதானமான பிரதேசத்தில் உள்ள மக்களை அனர்த்த முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கியுள்ளது.
 அனர்த்தத்தால் புதையுண்ட, சேதமடைந்துள்ள மீதியுள்ள உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அவ்வப் பகுதியிலுள்ள குழுக்கள் தகவல்களை பரிமாற்றிக்கொண்டு உடைமைகளை மீட்பதற்கு மனித அபிவிருத்தி தாபனத்தின் கிராமமட்ட குழுக்கள், கிராமமட்ட தலைவர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் தொண்டர்களும் களத்தில் இருந்து உதவி செய்து வருகின்றனர்.

நிவாரணம்!
நிவாரணப் பணிகளுக்கு இலங்கையின் நாலாப்பக்கங்களில் இருந்து சுயேட்சையாக பொது மக்கள், சமய தலங்கள், வர்த்தக சங்கங்கள், கழகங்கள் மற்றும் தேசிய தனியார் ஊடக சேவைகள் முதன்மைப்படுத்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதை போன்று அரசாங்கம், அரச சாரா நிறுவனங்களும் இச்செயற்திட்டத்தில் பாரிய ஒரு பங்கினை வகுத்து வருகின்றது.

இவ்வனர்த்தத்தில் முழுமையாக தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள், பகுதியாக தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள் மற்றும் அனர்த்தத்தின் அவதானத்தில் இருந்து வாழ்விடங்களை கொண்ட மக்கள் கடந்த 02 வாரமாக முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். தற்போது அவதானமான இடங்களிலிருந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் படிப்படியாக தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளார்கள். மீண்டும் மழை காலம் ஏற்பட்டால் மிக அவதானமான பகுதிகளில் வாழும் மக்களும், பூரணமாக தங்கள் வாழ்விடத்தின் மக்களும், பகுதியளவில் வாழ்விடத்தை இழந்த மக்களும் அனர்த்த முகாம்களில் பதிவாகி இருக்கின்றார்கள். அதை போன்று உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.
 
இம் மக்களின் வாழ்வாதாரம் தேயிலை தோட்டங்களிலும், கூலி வேலைக்கு செல்பவர்களாகவும், நகர்ப்புறங்களில் வியாபார புறங்களில் வேலை செய்பவர்களாக பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார வீழ்ச்சி என்பது மிக பாரிய பிரச்சினையாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இயலாத தன்மை, வியாபார தலங்களுக்கு செல்ல பாதை இல்லாத தன்மை காரணமாக நேரடியாக இவ்வனரத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிக்கப்படாத மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலானவர் நாட்கூலிகளாக சென்று சிறு சேமிப்பை கைவசம் வைத்திருப்பவர்கள். அந்த சேமிப்பு தற்போது முடிந்த நிலையில் பாதிக்கப்படாத மக்களும் நிர்க்கதியாக நிற்கும் நிலையினை இந்த தித்வா புயல் ஏற்படுத்தியுள்ளது.
எனவே மனித அபிவிருத்தி தாபனம் தித்வா அனர்த்தத்தில் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம மட்ட குழுக்களை உருவாக்கி மிக நேர்த்தியான முறையில் நேரடியாக பாதிக்கப்பட்ட, மறைமுகமாக பாதிக்கப்பட்ட சேவைகள் வழங்கி வருகின்றது. 

மீள் எழுதலுக்கான செயற்திட்டம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்வுகள் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய மக்களை மீள் குடியேற்றம் நிகழ்வுகள் படிப்படியாக நடைபெறும்.

மனித அபிவிருத்தி தாபனம் மற்றும் ஏனைய சிவில் அமைப்புகளும் தற்காலிகமாக இம்மக்கள் வாழ்வதற்கான வதிவிடங்களுக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. தற்போது இவ்வனர்த்தத்தில் நிர்க்கதியான பெரும்பாலான மக்கள் பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், தோட்ட கம்பனிக்கு சொந்தமான கட்டிடங்கள், சமய தலங்கள், உறவினர்கள் வீடுகள் போன்றவற்றில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கான உளவியல் சுகாதார ஆலோசனைகள் வழங்குவதோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள் ஆரம்பம் செய்ய வேண்டிய பட்சத்தில் தொழிற்சாலைகள் மீண்டும் உற்பத்தியை செய்யத் தொடங்கும் தருணத்தில் இம்மக்களுக்கு வதிவிடங்கள் அவசியப்படும் என்பது கடந்தகால அனுபவங்கள் உணர்த்துகின்றது. யாரேனும் தற்காலிக வதிவிடங்கள் அமைத்து தருவதற்கு உதவும் பட்சத்தில் எம்முடன் இணைந்து இம்மீள் கட்டுமானத்தை உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க முடியும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். என்றார்.

வி.ரி.சகாதேவராஜா
( காரைதீவு  நிருபர் )