மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமடு வயற்பிரதேசத்தில் காட்டு யானை இரண்டாவது தடவையாக தாக்கியதில் 86 வயதுடைய விவசாயி உயிரிழந்துள்ளார்.
இன்று 04.12.2025 அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான கொம்மாதுறை பிரதேசத்தைச்சேர்ந்த சின்னத்தம்பி கந்லிங்கம் என்பவரே மரணமடைந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.
கடந்தமாதம் அந்த காட்டு யானை இவரது தொன்னந்தோட்ட வாடிக்கு வந்தபோது இவர் சாதுரியமாக உயிர்தப்பியுள்ளார். இதனால் வாடிவீட்டினை யானை முற்றாக துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது.
தற்போது நடுநிசியில் இவர் உறக்கத்திலிருந்தவேளை மீண்டும் அங்கு வந்த யானை இவரை கடுமையாகத் தாக்கி உடலைச் சிதைவடையச் செய்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தார்.
இவரது தலை, கால், வயிறு ஆகிய உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.
இதன்போது மரணமடைந்தவரின் வாக்குமூலங்களை கரடியனாறு பொலிஸ் சார்ஜன்ட் ஏஎம்ஏ. நதீர் பதிவு செய்தார்.





