இலங்கையில்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால்
பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவுவதற்காக, நாவிதன்வெளி பிரதேச சபைத்
தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தனது சொந்த நிதியில் இருந்து பல லட்சம்
ரூபாய் செலவில் உலருணவு பொருட்கள், பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட
அத்தியாவசிய நிவாரணப் பொருட்களின் ஒரு தொகுதியை நன்கொடையாக வழங்கினார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஊடாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக அவர் நேரடியாக சென்று பொருட்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக கையளித்தார்.
உள்ளூராட்சி
சபைகளை பொறுத்தவரை அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் தவிசாளர்
ஒருவர் தனது சொந்த நிதியில் சமகாலத்தில் கூடுதலாக நிவாரணப் பொருட்களை
வழங்கி வருவது தவிசாளர் ரூபசாந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு உடனடியான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள்
பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிப்பு பணிகள்
தற்போது பிரதேச செயலக அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் நடை பெறுகின்றன.
இந்த
தன்னார்வ முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், பொதுமக்களும் தன்னார்வத்
துயர் துடைக்கும் பணியில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)








