சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது செயல்வாதங்களின் போது கலையை ஒரு
கருவியாகப் பயன்படுத்தி, சமூக மாற்றத்திற்கான தங்கள் கருத்துகளை எவ்வாறு
வெளிப்படுத்தலாம் என்பதைக் குறித்த மூன்று நாள் வதிவிட செயலமர்வு
கொழும்பில் நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி அறக்கட்டளை
(Eastern Social Development Foundation – ESDF) நிறுவனத்தின் நிறைவேற்று
பணிப்பாளர் இளம் சட்டமாணி எம்.ஆர். புஹாரி முஹம்மட் தலைமையில், ESDF
நிறுவனம் ஆர்ட் லோர்ட்ஸ் (ArtLords) எனும் சர்வதேச அமைப்புடன் இணைந்து இச்
செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆர்ட் லோர்ட்ஸ் நிறுவனத்தின்
சர்வதேச பயிற்றுவிப்பாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை
வழங்கினர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்வதிவிட செயலமர்வில்,
நாட்டின் பல பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட
சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பங்கேற்றனர்.
இச்
செயலமர்வின் போது, சமூக செயற்பாடுகளில் கலையை ஒரு சக்திவாய்ந்த கருவியாக
எவ்வாறு பயன்படுத்தலாம், கலை வடிவங்களின் ஊடாக சமூக செய்திகளை எவ்வாறு
எடுத்துச் செல்லலாம், கலை மூலம் கதை சொல்லும் முறைகள் (Storytelling
through Art) போன்ற விடயங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் நடைமுறை
பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதற்காக ஆர்ட் லோர்ட்ஸ் நிறுவனத்தின் இணைத்
தலைவர் ஒமேக் ஷரீஃப், அதன் இயக்குநர் சபைத் தலைவர் டாக்டர் லீமா ஹலீமா
ஹாலில் உள்ளிட்டோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
செயலமர்வின் முதல்
இரண்டு நாட்களில் சமூக செயற்பாட்டாளர்களுக்கிடையில் கலை வடிவங்களின்
புரிதல், அதன் சமூக தாக்கம் குறித்த அறிமுகம் மற்றும் பயிற்சிகள்
வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, (12) ஆம் திகதி வெள்ளிக்கிழமை,
நீர்கொழும்பில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் வளாகத்தில், செயலமர்வில்
பங்கேற்ற அனைவரின் பங்குபற்றுதலுடன் நாட்டின் சமாதானத்தை வெளிப்படுத்தும்
சுவர் ஓவியம் ஒன்று வரையப்பட்டது.
இம்மூன்று நாள் வதிவிட
செயலமர்வில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர்களுக்கு, “கலை மூலம் சமூக
மாற்றத்திற்காக செயல்படுபவர்” எனும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
(ஏ.எல்.எம்.சபீக்)

.jpeg)
.jpeg)

.jpeg)






