அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

 


 மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பொக்க கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்புப் பணியின் போது, உயிரிழந்த குடும்பத்தின் செல்லப் பிராணியான நாய் ஒன்று, மீட்புப் பணியாளர்களை அதன் உரிமையாளர்கள் புதையுண்ட இடத்திற்கு வழிகாட்டி உதவியதாகவும், பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செல்லப்பிராணியின் விசுவாசம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், நெகிழச் செய்துள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட இடம் இன்னும் முழுமையாக மண்சரிவுகளால் மூடப்பட்டிருப்பதாகவும், வீட்டின் எச்சங்களைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே குறித்த பகுதியில் தொடரும் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 80 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நிலப்பகுதி ஸ்திரமற்றதாக காணப்படுவதால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து முறையான இடர் அறிக்கையை வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.