வெள்ளத்தால் சேதமடைந்த, மனிதப் பாவனைக்கு ஒவ்வாத அரிசியை சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு விநியோகித்த மோசடிக் கும்பல் கைது

 


 

வெள்ளத்தால் சேதமடைந்த, மனிதப் பாவனைக்கு ஒவ்வாத அரிசியைச் சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைது செய்ததாகவும், அவர்களிடம் இருந்து 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டதாகவும் இலங்கைச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.

 நாடு முழுவதும் இவ்வாறான மோசடிச் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வர்த்தகங்களை எச்சரித்துள்ளார்.

அத்துடன், அரிசி வாங்கும் போது, குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களும் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துத் தகவல் தெரிந்தால், தமது பிரதேசத்தின் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்குமாறு சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


அவ்வாறு இயலாவிடின், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர அவசர இலக்கமான 1926 உடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.