மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முதலாக நிவாரணப் பணியினை மட்டக்களப்பு மாநகர சபையே முன்னெடுத்துள்ளது.
முதற் கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட திருகோணமலை ஈச்சிலம்பற்று பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இருந்த மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தலைமையில் அனைத்து சபை உறுப்பினர்களும் கட்சி பேதம் பாராது நிவாரண சேகரிப்பு பணியை முன்னெடுத்த போது மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், சமூக மட்ட அமைப்புக்கள் உள்ளிட்ட பொது மக்களும் தாராள மனதுடன் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தேவைப்படும் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள், குடிநீர், உடு துணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுதவியுள்ளனர்.
அவற்றுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடு இன்றி தமது டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவை வழங்கியுள்ளனர். உறுப்பினர்களின் கொடுப்பனவாக 575,000/= ரூபாயும் அத்தோடு மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து160,000/= ரூபாயினை பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக வழங்கியு தவியுள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரண தொகுதி வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை - மடுல்சீமை பகுதி மக்களுக்காக மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் பல சிரமத்திற்கு மத்தியில் நேரில் சென்று வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்றாம் கட்ட நிவாரண சேகரிப்பு பணி மட்டக்களப்பு மாநகர சபையின் அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண உதவியினை வழங்க முன்வருபவர்கள் தமது அலுவலகத்தில் வழங்கிவைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.





