கணவனை உலக்கையால் தாக்கி கொலைசெய்த மனைவி-அனுராத புரத்தில் சம்பவம் .

 


அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் குடும்பத்தகராறு காரணமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால், மனைவி  உலக்கையால் தாக்கி கணவனை கொலைசெய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் மஹகிரிந்தேகம பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 06ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை ,கிரிந்தேகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 61 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. மேற்படி தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான நபரை சிகிச்சைக்காக வேண்டி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.