அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும்.

 


எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். 
 
இன்று (09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என அவர் தெரிவித்தார். 
 
நாடளாவிய ரீதியிலுள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும். 
 
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, உடனடியாகத் திறக்க முடியாத நிலையில் 147 பாடசாலைகள் உள்ளன. 
 
மாகாண மட்டத்தில் பெறப்படும் இறுதி தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.