பேராதனை பல்கலைக்கழகத்தை பலமாகவும் பாதுகாப்பாகவும் மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக உள்ளது .

 

 


பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாடியப் போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த 27 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், கல்விசார் கட்டடங்கள், மாணவர் விடுதிகள் மற்றும் பிரதான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

முகாமைத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பீடங்கள், தகவல் தொழில்நுட்ப நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.

110 இற்கும் அதிகமான கணினிகள், அத்தியாவசியமான ஆய்வுகூட உபகரணங்கள், பரீட்சை ஆவணங்கள் மற்றும் நான்கு பிரதான தகவல் தொழில்நுட்ப வழங்கிகள் ஆகியன அழிவடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



அதன்படி, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆரம்பச் சேத மதிப்பீடு ஆறு பில்லியன் ரூபாயை விட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தை பலமாகவும் பாதுகாப்பாகவும் மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு பிரதமர் உறுதி அளித்துள்ளார்.