தற்போதைய அனர்த்த சூழ்நிலையில், மக்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதாகும்,

 

 


நாட்டில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக ஆபத்தான நிலை நீடிப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரித்துள்ளார். 
 
நான்கு மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயத்திற்கான சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். 
 
“தற்போதைய அனர்த்த சூழ்நிலையில், மக்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதாகும்,” என்றும் அவர் அறிவுறுத்தினார். 
 
ஆபத்துகள் இருந்தபோதிலும், வார இறுதிச் சுற்றுலாக்களுக்குச் செல்வது சாத்தியமா என்று பொதுமக்கள் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்து விசாரித்த பல அழைப்புகள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். 
 
கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்தே இந்த சிவப்பு அறிவிப்புகள் நீட்டிக்கப்பட்டன. 
 
நேற்று (11) மீகாகியுல மற்றும் தெமோதரை ஆகிய பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தியதுடன், இந்த நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார். 
 
நவம்பர் 20 முதல் இன்று (12) வரை, அபாயகரமான இடங்களைச் சோதிப்பதற்காகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 2,716 கோரிக்கைகள் கிடைத்துள்ளன. 
 
அவற்றில் இதுவரை 589 ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 
 
தொடர்ச்சியான அபாயங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் காரணமாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் (கட்டம் 2) தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 
 
அத்துடன், முதலாம் கட்ட எச்சரிக்கைகள் மூன்று மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 
 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால மழைவீழ்ச்சியைப் பொறுத்து இந்த எச்சரிக்கைகள் மாறக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.