ஹிக்கடுவை கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை நீந்தச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, அன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவல பகுதியில் டிசம்பர் 19ஆம் திகதி காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு நபர் ஒருவர் பலத்த நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு, 1990 ‘சுவ செரிய’ ஆம்புலன்ஸ் சேவை மூலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது உடல் பலப்பிட்டிய வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை,
வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில், ஹிக்கடுவை
கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த 44 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவர் பலத்த
நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அச்சமயம் கடமையில் இருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி முதலுதவி வழங்கியுள்ளனர்.
தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.





