உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு தயாராகுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய 5 மாகாணங்களைச் சேர்ந்த 101,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் பலர் அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழப்பு, காயம் மற்றும் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஏனைய மாணவர்கள் பலர் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் துல்லியமான தரவுகள் கிடைத்த பின்னரே பரீட்சையை நடத்த முடியும் என அவர் கூறினார்.
எனவே, ஜனவரிக்குள் அனைத்துத் தரவுகளையும் துரிதமாகச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குத் தேவையான அதிகபட்ச வசதிகளை வழங்க உதவுமாறும் அனைத்து தரப்பினரிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





