இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி சமூகத்தினரின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற நேரடிப் பாதிப்புகள் ஏதுமில்லாத போதிலும், இந்த இயற்கைச் சீற்றத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் முடங்கியுள்ளது.
தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காகச் சுற்றுலாவையும் கைவினைப் பொருட்களையும் மட்டுமே நம்பியிருக்கும் இச்சமூகத்தினர், தற்போது வருமானமின்றி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாகத் தற்சார்பு வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இவர்கள், தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்திடமிருந்து நிவாரண உதவிகளை எதிர்பார்ப்பதாக பழங்குடி தலைவரான உருவாரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்துத் தடைகள் மற்றும் பயண இரத்துகள், மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இக்கட்டான இந்தச் சூழலில், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிற மக்களுக்கு முன்னுரிமை அளித்தாலும், தமக்கும் சிறு உதவி கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.





