தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வியை தொடர முடியுமென, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாதெனத் தெரிவித்த அவர்,இதற்கமைய கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தளர்வான கொள்கைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டமும் 16 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும்,அதை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேரிடருக்கு பிறகு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இதன்பிரகாரம் மேற்கு,தெற்கு, வடக்கு, கிழக்கு,சபரகமுவ மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும். இருப்பினும்,மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 147 பாடசாலைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





