மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பங்குடாவெளி மக்களுக்கு நிவாரணம்.


















மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. 

அந்த வகையில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆறு பெருக்கெடுத்தமையால் வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பங்குடாவெளி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  இடம் பெற்றது. 

இந்நிலையில்  பாதிக்கப்பட்ட பங்குடாவெளி 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவினால் அமரத்துவமடைந்த சட்டத்தரணி கௌரி சங்கரி நினைவாக கௌரி சங்கரி தவராஜா ஞாபகார்த்த அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் நிதி உதவி மூலம்  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால்  100 குடும்பங்களுக்கு  ஆறாயிரம்  ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மிகுதி நிதி பேரவையினால் வழங்கப்பட்டது. 

குறித்த உதவியானது செங்கலடி பிரதேச செயலாளர் ஒமுங்கமைப்பில் செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் வழிகாட்டலில் கிராம அதிகாரி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகிதம் பங்குடாவெளி மக்களுக்கு அரிசி 10 கிலோ, சீனி 3 கிலோ, கோதுமை மா 3 கிலோ, பருப்பு 2 கிலோ, கடலை 1 கிலோ, நூடுல்ஸ் 1 கிலோ, உப்பு 1 கிலோ, மிளகாய் தூள் 100 கிராம், தேயிலை 100 கிராம், சோயாமீற் 500 கிராம், தீப்பெட்டி உட்பட்ட   உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் செங்கலடி பிரதேச சபை உபதவிசாளர் எஸ்.சர்வானந்தன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவை உறுப்பினர்களான  சா.லோகநாதன், நா.ஜெகன், இ.சசிகுமார்,  ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

 

 

  ந.குகதர்சன்