‘சாகர் பந்து’ நடவடிக்கையை நிறைவு செய்த இந்திய இராணுவ மருத்துவ குழுவினர் தாயகம் திரும்பினார்கள்.

 

 






 

‘சாகர் பந்து’ நடவடிக்கை நிறைவு: மஹியங்கனையில் சேவை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவமனை தாயகம் திரும்பியது !
‘சாகர் பந்து (Operation Sagar Bandhu)’ நடவடிக்கையின் கீழ் இலங்கையில் அவசரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்திய இராணுவத்தின் முழுமையான தரை மருத்துவமனை (Para Field Hospital) மற்றும் அதன் குழுவினர் வெற்றிகரமாகத் தமது சேவையை நிறைவு செய்து இன்று (டிசம்பர் 14) தாயகம் திரும்பினர்.
தித்வா புயலினால் ஏற்பட்ட பாரிய சேதங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சீர்குலைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி வழங்க இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவைச் (Shatrujeet Brigade) சேர்ந்த 78 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த பணிக்குழு, கடந்த டிசம்பர் 2, 2025 அன்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
இந்த மருத்துவமனை, பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பகுதியில் அமைக்கப்பட்டு, இப்பிராந்தியத்தின் அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்தது.
இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண (HADR) முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சேவையின் மூலம், தினமும் 1,000 முதல் 1,200 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
உயிர்காக்கும் அதிர்ச்சிக் காயங்களுக்கான மேலாண்மை (trauma management), சிறிய மற்றும் பெரிய சத்திரசிகிச்சைகள் (surgeries), மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, இந்திய இராணுவத் தரை மருத்துவமனை குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது:
மொத்தம் 7,176 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
513 சிறிய சத்திரசிகிச்சைகள் (Minor Procedures) மேற்கொள்ளப்பட்டன.
14 பிரதான சத்திரசிகிச்சைகள் (Major Surgeries) வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தச் சேவைகள் பெரும் ஆறுதலையும், நிவாரணத்தையும் அளித்தன.
டிசம்பர் 12 அன்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஊவா மாகாண கௌரவ ஆளுநர் கபில ஜயசேகர ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக விஜயம் செய்து, அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டனர்.
தவிர, இந்திய இராணுவக் குழுவினர் ஒரு முக்கியமான தகவல்தொடர்பு சேவையை மீட்டெடுக்கும் பணியையும் மேற்கொண்டனர்.
டிசம்பர் 10, 2025 அன்று, இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (SLT) கோரிக்கைக்கு இணங்க, மஹியங்கனை பகுதியில் புயலால் சாய்ந்த மரம் காரணமாகத் துண்டிக்கப்பட்டிருந்த ஒளியிழை வடம் (Optical Fiber Cable - OFC) ஐ மீட்டெடுக்க குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பாரிய தகவல் தொடர்புத் துண்டிப்பைச் சரிசெய்ய, இந்திய இராணுவத்தின் சிக்னலர்ஸ் (Signallers) குழுவினர் தரை மருத்துவமனைக்கு அருகிலுள்ள BTS கோபுரத்திற்கு அருகில் துல்லியமான ஒளியிழை வடம் பிணைப்பு (OFC Splicing) வேலையைச் செய்து இணைப்பை மீள நிறுவினர்.
சவாலான காலநிலை மற்றும் கடினமான நிலப்பரப்பிலும், அத்தியாவசிய தகவல் தொடர்புச் சுற்றுகளை இந்தக் குழு வெற்றிகரமாக மீட்டெடுத்தது, இயல்பு நிலை திரும்பியது.
தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இந்திய இராணுவத் தரை மருத்துவமனை மஹியங்கனையில் தனது செயல்பாடுகளை முடித்துக்கொண்டது.
78 பேர் கொண்ட குழு இன்று கொழும்பில் இருந்து இந்திய விமானப்படையின் C17 குளோப்மாஸ்டர் (Globemaster) விமானம் மூலம் தாயகம் திரும்பியது.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, அதே விமானத்தின் மூலம் 10 தொன் அத்தியாவசிய மருந்துகளும் 15 தொன் உலர் உணவுகளும் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.
மருத்துவக் குழு புறப்பட்டபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்த சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கை வரலாற்றில் ஒரு நட்பு நாட்டால் நிலைநிறுத்தப்பட்ட மிகப் பெரிய தரை மருத்துவமனை இதுவே என்று குறிப்பிட்டார். இந்தப் பேரிடர் காலத்தில் இந்தியா வழங்கிய துரிதமான, வினைத்திறனான, பெரியளவிலான மனிதாபிமான உதவிக்காக இலங்கை அரசாங்கத்தின் நன்றியையும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தரை மருத்துவமனையின் செயல்பாடு, தித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்தியா, உரிய நேரத்தில் மற்றும் உயர்தர மருத்துவ உதவியை வழங்கியதன் மூலம், இலங்கை மீதான தனது அசைக்க முடியாத உறுதியையும் பலமான நட்புறவையும் வெளிப்படுத்தியுள்ளது.