அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 மில்லியன் அல்லது அரச காணி ஜனாதிபதி அறிவிப்பு :

 


அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்தும் போது, அவர்களை அரச காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 
 
அத்துடன், அரச காணியை வழங்க முடியாத நிலைமையில், காணியைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் 5 மில்லியன் ரூபாயை அவர்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 
 
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். 
 
அனர்த்த நிலைமை காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு அவசியமான இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 
 
அத்துடன், வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும்போது 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் உரிமையைப் பெறும் வகையில், முறையான வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 
 
இதேவேளை, சேதமடைந்த மீன்பிடி படகுகளை பழுதுபார்ப்பதற்கு உதவி வழங்குவதுடன், இறால் பண்ணைகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது மற்றும் வங்கிகள் மூலம் சலுகைக் கடன் வேலைத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 
 
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இந்த அறிவுறுத்தலை விடுத்ததுடன், கடற்றொழில் சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 
 
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாமதமின்றி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.