நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
அண்மைய
காலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக
உடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
அதன்படி , அனர்த்த முகாமைத்துவ
நிலையம் நேற்று இரவு 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, அனர்த்தங்களால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல்
போயுள்ளவர்களின் எண்ணிக்கை 352 ஆக பதிவாகியுள்ளது.
அனர்த்தங்களால்
கண்டி(88), பதுளை (82), நுவரெலியா (75), குருணாகல் (52), மாத்தளை (24),
கேகாலை (22) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன்,
மொத்தமாக 3 இலட்சத்துக்கு 82 ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13
இலட்சத்துக்கு 73 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 57 ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 4 ஆயிரத்து 597 பேர் ஆயிரத்து 368 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அனர்த்தங்களால் 432 வீடுகள் முழுமையாகவும் 15ஆயிரத்து 688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





