சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ்,ஆறாவது தவணையாக,சுமார் 350 மில்லியன் டொலர் நிதியை இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சில் நடைபெற்ற உயர்மட்ட நன்கொடையாளர்கள் அமைப்புக்களின் சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இதனைத் தெரிவித்தார். தித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பிடுவதற்கும் தேசிய நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு நன்கொடையாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை நிதியமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் இராஜதந்திரிகள், கடன் வழங்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிக்கும் பிரநிதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்கள்,மீட்பு பணிகளை துரிதப்படுத்தல் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளிலுள்ள சவால்கள் என்பவற்றை திறைசேரியின் செயலாளர் தெளிவுபடுத்தினார். அபிவிருத்திகளுக்கான உதவிகள், சலுகைக் கடன்கள், நிவாரணப் பொருட்கள் இன்னும் மனிதாபிமான உதவிகளாகத் தேவைப்படுபவை
என்பவற்றின் அவசியங்களும் தௌிவுபடுத்தப்பட்டது.பொருளாதாரத் துறைகள் சுருங்குவதாலும் உள்நாட்டுக் கடன்களுக்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டதாலும் ஏற்படும் தடைகளைச் சுட்டிக்காட்டி, வெளிநாடுகளின் நிதியுதவிகளின் முக்கியத்துவத்தை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியை விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




