அனர்த்தத்தினால் சேதமடைந்த
விகாரைகள் மற்றும் மதத் தலங்களை சுத்திகரிப்பு செய்வதற்காக கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை
எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அது தொடர்பில் இந்த வாரம் அமைச்சரவை முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்த
வருடத்தில் அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்திச்
சம்பந்தப்பட்ட அனைத்து மறுசீரமைப்புகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு
முன்னர் நிறைவு செய்யுமாறும் அந்த நிதி ஒதுக்கீடுகளை மீளத் திருப்பி அனுப்ப
வேண்டாம் என்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு
அரசாங்கம் வழங்கும் 15,000 ரூபா கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி
பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த அனைத்துப் பணிகளிலும் எல்லையற்ற
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முப்படைகள், அரச அதிகாரிகள் மற்றும் பொது
மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.





