இந்தோனேசியாவில் பயணிகள் பஸ்ஸொன்று நேற்று முன்தினம் நள்ளிரவில்
விபத்துக்குள்ளானதில் 16 பேர் நேற்று பலியாகியுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக்
சுங்கச்சாவடியில் வெளியேறும் பாதையில் நுழையும் போது 34 பேருடன் பயணித்த
இப்பஸ் வண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கொன்கிறீட் தடுப்புச்சுவர் மீது
மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தை அறிந்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு
நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதோடு, மேலும்
18 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக
உள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பழமையான அரச நகரமான
யோக்யகர்த்தாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து
நிகழ்ந்ததாக தேடுதல் மற்றும் மீட்புக் குழு அதிகாரி புடியோனோ
தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஜாவா பொலிஸார்
மேற்கொண்டுள்ளனர்.





