நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட டிட்வா
சூறாவளி அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மீட்புப் பணிகளைக் கருத்தில்
கொண்டு, டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த முதலாவது
'இலங்கையர் தினம்' (Sri Lankan Day) தேசிய நிகழ்ச்சித் திட்டம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வானது கொழும்பு மாநகர சபை
மைதானம், விகாரமஹாதேவி பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான
வீதிகளில், பொது மற்றும் தனியார் துறையினரின் பங்கேற்புடன் நான்கு
வலயங்களைக் கொண்ட ஒரு பெரிய அளவிலான தேசிய கொண்டாட்டமாக நடத்த
திட்டமிடப்பட்டிருந்தது.
சமூகங்களிடையே புரிந்துணர்வை
வளர்ப்பதற்கும், இணக்கமான இலங்கையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல்
மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதியால் 2025 ஆம் ஆண்டுக்கான
பாதீட்டு உரையில் இந்த நிகழ்வு முன்மொழியப்பட்டது.
அத்தோடு,
இலங்கையின் பல இன, மத மற்றும் பல்வகைப்பட்ட கலாசார அடையாளங்களை
முன்னிலைப்படுத்தும் நோக்கில், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில், மாவட்ட மட்டத்திலான
உணவு கலாசாரங்கள், பாரம்பரிய கலைகள், உள்ளூர் கைத்தொழில்களின்
கண்காட்சிகள், விற்பனை நிலையங்கள், மற்றும் புதிய தயாரிப்பு வாய்ப்புகளை
அறிமுகப்படுத்துதல் ஆகியன திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சரவை
அங்கீகாரம் ஒக்டோபரில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஆயிரக்கணக்கான மக்கள்
இடம்பெயர்ந்துள்ள, முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ள, மற்றும்
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் அவசரகால சேவைகள்
தொடர்ந்தும் இயங்கிவரும் இத்தருணத்தில், நாடு தழுவிய கலாசார விழாவை
நடத்துவது பொருத்தமற்றது என அரசாங்கம் தீர்மானித்ததாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை
சீரடைந்தவுடன் 'இலங்கையர் தினம்' நிகழ்ச்சித் திட்டத்திற்கான புதிய
திகதிகள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





