நாட்டில் அபாய நிலையில் உள்ள 10,813 இடங்களை ஆய்வு செய்ய 5,374 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளில் 1,426 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வசந்த சேனாதீர,
பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்ய சுமார் 45 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 12 குழுக்கள் கண்டி மாவட்டத்திற்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளூர் குழுக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்திற்கு திட்டமிடப்பட்ட இடங்களையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும். டித்வா சூறாவளி காரணமாக 10 மீட்டருக்கும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்ட 1,241 இடங்களை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
10 மீட்டருக்கும் குறைவான நிலச்சரிவுகள் ஏற்பட்ட பல இடங்கள் உள்ளன என்றும், நிலச்சரிவுகள், மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்ட இடங்கள் பல உள்ளன என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.





