மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை



District Media Unit News-Batticaloa



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மண்டூர் பிரதான வீதி ஊடறுத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பிரதேச செயலகம் ஊடாக உழவு இயந்திரம் மற்றும் இராணுவத்தின் ட்ரக் வண்டியை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கிரான் பிரதேச பிரிவில் கிரான் புலி பாய்ந்த கல் தரைவழிப் பாதை வெள்ள நீர் காரணமாக தடைப்பட்டதனால் கிரான் பிரதேச செயலகம் ஊடாக இயந்திரப்படகு சேவை ஈடுபட்டு வருகிறது. இதேவேளை பொதுமக்கள் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது வரை கிடைத்த தகவல்களுக்கு அமைவாக கோரளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 2 வீடுகளும் காத்தான்குடியில் 5 வீடுகளும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரதிற்கு இடையூறும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்ல முடியாத இடங்களுக்கான போக்குவரத்து வசதிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரிவை 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்த நிவாரண சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ஒரு வாரத்துக்கு இரத்தச் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதேவேளை வங்காள விரிகுடா தாழமுக்கம் காரணமாக 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரையான 24 மணி நேர காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 93.06 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இம்மழை நிலைமை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்து பெய்யுமானால் தாழமுக்கத்தின் வீரியத்தைப் பொறுத்து 100 மில்லி மீட்டர் வரை பெய்யலாம் அல்லது மாற்றம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை பெய்த மழை வீழ்ச்சிக்கு அமைவாக நவகிரி ஆறு பகுதியில் 171.2 மில்லி மீட்டரும், உன்னிச்சையில் 143 மில்லி மீட்டரும், கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலை பகுதியில் 134.2 மில்லி மீட்டரும், உருகாமத்தில் 133. 3 மில்லி மீட்டரும், தும்பங்கேனியில் 102.2 மில்லி மீட்டரும், வாகனேரியில் 44.3 மற்றும் கட்டு முறிவில் 34.0 மில்லி மீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.