அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன. இந்த பேரணியில் நாங்கள் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனைத்து விடயங்களையும் விமர்சிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. சிறந்தவற்றை வரவேற்போம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய தொழிற்றுறையை மேம்படுத்தும் திட்டங்கள் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.இது ஒரு அநாவசியமான பேரணி என்றே குறிப்பிட வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன. பேரணிகள், போராட்டங்களினால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. நாங்கள் இந்த பேரணியில் கலந்துக்கொள்ள போவதில்லை என்றார்.
மேலும் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். வெட்கம் என்பதொன்று இருக்குமாயின் அவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஆணைக்குழு செயற்படுகிறது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு ஊடக கண்காட்சியை மாத்திரம் நடத்துகிறது எனவும் தெரிவித்தார்.





