வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தீவிரமாக காணப்படுகிறது.

 

 

வட,கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம். பி ஸ்ரீநேசன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

அத்துடன், மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமிலிருந்த பாடசாலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 56  வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கல்வி எனும் வலுவான ஆயுதத்தால் சமூகத்தை மாற்ற முடியும். ஆகவே, கல்வித் துறை மேம்பாடு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்பள்ளி கல்வி முறைமை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய கொள்கையை வகுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தீவிரமாக காணப்படுகிறது. நகர்ப்புற பாடசாலைகளுக்கும், கிராமப்புற பாடசாலைகளுக்கும் இடையிலான வளப் பகிர்வும் ஏற்றத் தாழ்வாக காணப்படுகிறது. கல்வியில் சமத்துவத்தை பேண வேண்டுமாயின் வளங்கள் சமமான முறையில் பகிரப்பட வேண்டும்.

பாடசாலைகளுக்கிடையிலான  வளப்பற்றாக்குறை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளை சிறந்த பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கு கடவுளிடம் நேர்த்தி வைக்கின்றார்கள்.

அதேபோன்று கிழக்கில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் விவசாயம் தொடர்பான பாடநெறி காணப்படும் நிலையில் இந்த கல்லூரியின் தரச் சான்றிதழை என்.வி.கியூ 5 மற்றும் 6 என்ற நிலைக்கு தரமுயர்த்துமாறு தொழிற்கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தெஹிவளை மீலாத் பாடசாலை பிலியந்தலை கல்வி வலயத்திலுள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையாக காணப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு இந்த பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை ஒரேயொரு கட்டடமே காணப்படுகிறது. இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்ய உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி மற்றும் பிரதிரமைச்சர் முனீர் முழப்பர்  ஆகியோரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.