வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட வாழைச்சேனை பிரதேசத்தை சிறந்த சுற்றுலாத்துறை வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களுக்காக ரூ. 1500 மில்லியன் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அந்தப் பிரதேசத்தை பாசிக்குடாவுடன் தொடர்பு படுத்த முடியும் என்பதால் அதற்காக 300 ஏக்கர் நிலப்பிரதேசம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி விவாதத்தில் உரையாற்றிய எம். எல் ஏ.எம். ஹிஸ்புல்லா எம்.பி வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை அபிவிருத்தி செய்யப்படுவது வேண்டியமை, அங்கு ஒரு சுற்றுலா நகரத்தை உருவாக்க முடியும் என்றும் சபையில் குறிப்பிட்டார். அதற்கான ஆலோசனைகளையும் அவர் சபையில் அமைச்சரிடம் முன்வைத்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,
வாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மற்றும் காகிதத் தொழிற்சாலை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் ஹிஸ்புல்லா எம்.பி தெரிவித்த கூற்றுக்கள் சிறப்பானவை.
அந்தத் திட்டத்திற்காக தற்போது ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக தற்போது வீதிகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளுக்காக நில அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்களை வரவழைத்து சுற்றுலாப் பிரதேசமாக அதனை முன்னேற்றுவதற்கும் அத்துடன் சிறந்த பயிர்ச் செய்கை இடமாகவும் அதனை உருவாக்குவதற்கும் அத்துடன் கிரீன் ஹவுஸ் பிரதேசத்தை ஏற்படுத்தவும் முடியும். பெறுமதி சேர்க்கும் பல்வேறு திட்டங்களை அங்கு முன்னெடுக்க முடியும். அதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





