கோறளைப்பற்று பிரதேச சபையின் ஐந்து பொதுநூலகங்களுக்கு தேசிய நூலகத்தினால் 2024ஆம் வருடத்திற்கான சிறந்த நூலகங்களுக்கான விருது, அகில இலங்கை ரீதியாக பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை
2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி அவர்களின் தலைமையில் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
2024ஆம் பயனுள்ள வகையில் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படுத்திய மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் பாடசாலை நூலகங்கள் என ஏறத்தாழ 1500 நூலகங்கள் இவ்விருதுக்காக அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதில், நாடு முழுவதிலும் இயங்கி வருகின்ற நூலகங்களுள் கடந்த வருடம் மிகவும் சிறப்பாக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தியதுடன், வாசிப்பை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டங்களை சிறப்பாக செயற்படுத்திய 52 நூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொதுநூலகம், வாழைச்சேனை பொதுநூலகம், விநாயகபுரம் பொதுநூலகம், சந்திவெளி பொதுநூலகம், தேவபுரம் பொதுநூலகம் என 05 பொதுநூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டமை மிகவும் குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியாக 2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவற்றுள் அதிக நூலகங்களைக் கொண்ட பிரதேச சபையாக மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை விளங்குகின்றது.
பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொதுநூலகங்களுக்கான தேர்வில் அகில இலங்கை ரீதியாக பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பெற்றுக் கொண்டது.
இதற்கான விருதினை பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி, சான்றிதழினை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க வழங்கி வைக்க பேத்தாழை பொதுநூலகப் பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப். அப்துல்லா ஹாரூன், நூலக உத்தியோகத்தர்களான புஸ்பா தயாளன், புனிதா ஈவெரா, கந்தையா கங்கா ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
வாழைச்சேனை பொதுநூலகத்தின் சார்பாக நூலகப் பொறுப்பாளர் தாரணி தங்கத்துரை, சிவனேஸ்வரி செல்வேந்திரன், தனுஜா துரைசாமி, அரியநாயகம் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். சந்திவெளி பொதுநூலகத்தின் சார்பாக நூலகப்பொறுப்பாளர் சுதாமதி அருள்பிரகாசம், சிவஞானசெல்வரெட்ணம் குகதீசன் இணைந்து பெற்றுக் கொண்டனர். தேவபுரம் பொதுநூலகத்தின் சார்பாக நூலகப்பொறுப்பாளர் நடராஜமணி புலேந்திரன், கணேசமூர்த்தி ரவீந்திரன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
விநாயகபுரம் பொதுநூலகம் சார்பாக நூலகப்பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை பிறேம்குமார், ஆறுமுகம் அருமைநாயகம், நிலக்சினி மஞ்சுதராஜ் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. சுனில், தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் செனானி பண்டார மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பிரதிப் பணிப்பாளர் இரோமி விஜேசுந்தர மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட நாடு முழுதிலுமிருந்து விருதுக்காக தேர்வுசெய்யப்பட்ட நூலகங்களில் பணிபுரிகின்ற நூலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ந.குகதர்சன்
















