இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
இந்த தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு, மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
.jpg)




