தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 1000 பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தம்புள்ளை பிராந்திய தபால் பரிமாற்று மையத்தின் அடிக்கல் நாட்டு விழா, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்துக்கு மேலதிகமாக, நாட்டில் உள்ள பிரதான நகரங்களை மையமாகக் கொண்டு பிராந்திய தபால் பரிமாற்று மையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக தற்போது 129 மில்லியன் ரூபா செலவில் தம்புள்ளை பிராந்திய தபால் பரிமாற்று மையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கண்டி, பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான தபால் விநியோகம் தம்புள்ளை பிராந்திய தபால் பரிமாற்று மையத்தின் மூலம் இடம்பெறும்.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தின் சுமையை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று 4,000 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களைக் கொண்டு இயங்கும் தபால் திணைக்களம், நாடு முழுவதும் பரவியுள்ள முறையான வலையமைப்பைக் கொண்ட ஒரு வலுவான சேவையாகும்.
கடந்த 9 மாதங்களில் மாத்திரம் நாட்டிள் உள்ள 49 இலட்சம் நபர்கள், தபால் சேவையினுடாக 180 கோடி ரூபா பெறுமதியான சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஏற்கனவே சேவையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், நிரந்தர பணியாளராக இணைத்துக் கொள்வதற்கான முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
14 உப தபால் அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலகங்களின் கட்டுமாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.





