நாளை (10) ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில்.

 


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 நாளை (10) ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

 இதற்காக நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

 இந்த ஆண்டு பரீட்சைக்கு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,000 தனியார் பரீட்சார்த்திகள் என மொத்தம் 340,521 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். 

 பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

விண்ணப்பதாரர் ஒருவர் அனுமதி அட்டையைப் பெறவில்லை என்றால், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அதனைப் பதிவிறக்கம் செய்யலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கூறுகிறார். 

 மேலும் காலை 8:30க்கு பரீட்சை ஆரம்பிக்கும் என்பதால், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, பரீட்சை நிலையத்திற்குச் சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் சாதாரண நாட்களில் மதியம் 1 மணிக்கு பரீட்சை தொடங்கும் எனவும், வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் மதியம் 2:00 மணிக்கு ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 மின்னணு கடிகாரங்கள், பிற மின்னணு உபகரணங்கள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றைப் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

 மேலும் பரீட்சை மோசடிகளில் ஈடுபடாமல், கவனத்துடன் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்துகிறது.