கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான வித்தகர் விருதினைப் பெற்றார் கவிஞர் வி. மைக்கல் கொலின்.

 


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான வித்தகர் விருதினைப் பெற்றார் கவிஞர் வி. மைக்கல் கொலின்.

தமது வாழ் நாளில் கலை இலக்கியத் துறைக்கு ஆற்றிய பெரும் பணிக்காக ஐம்பது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் இவ் விருது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக கவிஞராக, சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக, பத்திரிகையாளராக, சஞ்சிகை ஆசிரியராக, பதிப்பாசிரியராக இலக்கியத்தின் பல்வேறு தளங்களில்
தொடர்ச்சியாக இயங்கிவரும் மைக்கல் கொலின் நாவல், சிறுகதை கவிதை என இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சாகித்திய விருதுபெற்ற
இவரது ‘பரசுராமபூமி’ சிறுகதைத் தொகுப்பே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஈழத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். இது amazon வெளியீடாக வெளிவந்துள்ளது.

தனது மகுடம் பதிப்பகத்தின் மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டமைக்காக ஈழத்தில் பதிப்புத்துறைக்கென ‘தமிழ்ச்சங்கு விருது,’ ‘பதிப்புச்செம்மல் விருது’ போன்ற விருதுகளைப்பெற்ற முதல் பதிப்பாசிரியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.