நல்ல சிந்தனைத் திறன் உள்ளவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். சிரேஷ்ட விரிவுரையாளர் பிரான்சிஸ்.























  நல்ல சிந்தனை ஆற்றல் திறன் உடைய மனப்பான்மையை வளர்த்துக் கொள்பவர்களாக எதிர்காலத்தில் மாணவர்களாகிய நீங்கள் உருவாக வேண்டும் 

அப்போதுதான் நீங்கள்  எதிர்காலத்தில் சந்திக்கின்ற சவால்களை மனத்தைரியத்துடன் எதிர்கொண்டு ஆக்கபூர்வமான கற்றல் உட்பட அனைத்து செயல்பாடுகளையும் ஆக்கபூர்வமாக  மேற்கொள்ள முடிவதுடன் உள ஆளுமையுடைய மனிதர்களாகவும் சமூகத்தில் திகழ முடியும்.  அதற்கு மனதை வளப்படுத்தும் உளவியல்  பயிற்சிகளை நீங்கள் பெற்றுக்கொள்வது அவசியமாகும் 

இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட. விரிவுரையாளரும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்ரும், உளசமூக வலுவூட்டல் வளவாளருமான திரு.S. பிரான்சிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் பாடசாலையின் அதிபர் திரு. S. பிரான்சிஸ் தலைமையில்  பிரதி அதிபர் திரு. K. லோகேஸ்வரன் மற்றும் உளவளத்துணைக்கு பொறுப்பான ஆசிரியை திருமதி. றோகினி மோகனராஜா  ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மனநல விழிப்புணர்வு செயற்பாடு ஒன்று இன்று (27.11.2025) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்ல சிந்தனை ஆற்றல் உள்ளவர்களாக நீங்கள் காணப்படுகின்றீர்களா என்பதை நீங்களே சுய பரிசோதனை ஒன்று செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் நிலையை நீங்கள் உணர்ந்து கொள்வதுடன் உங்களுள் இருக்கும் எதிர்மறை எண்ணத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக கற்றல்  செயற்பாட்டினையும் மேற்கொள்வதுடன் உள சுகாதார வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவும் முடியும் என தெரிவித்தார் 

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

வாழ்வில் ஏற்படும்  பிரச்சினைகளை எதிர்கொள்ள உங்களால்  முடியாமல் உள்ளதை நீங்கள் உணர்ந்தால் அதனை மனதினுள்ளே வைத்துக் கொள்ளாது உங்களின் இரகசியத்தை பாதுகாத்து உங்களுக்கு வழிகாட்டக்கூடிய நம்பிக்கையான ஒருவருடன் மனம் விட்டு பேசும் மன நிலையையும் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அது மன அழுத்தப் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குவதுடன் மனச்சோர்வு நிலைக்கு எம்மை இட்டுச் சென்று அன்றாட செயற்பாடுகளில் விருப்பமின்மையை ஏற்படுத்தி விடும். இதனால் எமது கற்றல் நடவடிக்கைகளில் தளர்வு நிலை ஏற்படுவதுடன் வைத்திய சிகிச்சை பெறும் சூழ்நிலையும் உருவாகிவிடும் என கூறினார்.

அவர் மேலும் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

எமது சிந்தனையில் நல்ல சிந்தனை உருவாகும் போதே நாம் நல்ல உளவியல்  ஒழுக்கமுள்ளவர்களாக உருவாகின்றோம். உங்களின் அல்லது மற்றவரின் வெளித்தோற்றத்தை வைத்து ஒழுக்கத்தை தீர்மானித்து விட வேண்டாம் மாறாக ஒவ்வொருவரினதும் சிந்தனையின் வெளிப்பாடான நடத்தைகளைப் பற்றி அவதானிப்பதன் மூலம் அவர்கள் நல்லொழுக்கம் உள்ளவரா ? மனத்தூய்மை கொண்டவரா ? என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மாணவர்களாகிய நீங்கள் சிறுபராயத்தில் இருந்தே உங்கள் உணர்வுகளை கையாள உளவியல்  பயிற்சிகளைப் பெற வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் போது அதனை வன்முறை இன்றி உள ஆரோக்கியமான முறையில் சரி செய்து கொள்ள முடியும் இல்லையேல் நாமும் வன்முறையாளர்களாக மாறுவதுடன் எமது நடத்தை எம்மை ஒழுக்கம் அற்றவர் என்பதை வெளிக்காட்டி விடும். எனவே உள ஆரோக்கியமான கற்றலுக்கு நல்ல ஆரோக்கியமான சிந்தனை பிரதானமான ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் மன அழுத்த உணர்வுகளை  இனம் காணும் வகையிலான பயிற்சி செயற்பாடுகள் இடம் பெற்றதுடன் அதற்கான விளக்கங்களும் வழங்கப்பட்டன.