தமிழ்நாடு அரசு விருது பெற்ற மட்டக்களப்பு- கதிரவன் கலைக்கழகம்.







தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026 நிகழ்வில் இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக்கழகம்  ஆற்றி வரும் தமிழ் பணிக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்று சிறப்பு பெற்றிருக்கிறது.

புலம்பெயர் தேசங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பங்கு பற்றிய இந்நிகழ்வில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் சங்கங்கள் சிலவற்றுக்கு இவ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன .இவ்விருதில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் 1976 ஆம் ஆண்டு தோற்றம் பெற்று தற்போது 50 ஆவது ஆண்டு பொன்விழாவில்  ஊர் இருந்து உலகம் வரை எனும் கருப்பொருளோடு பன்னாட்டு ரீதியாக கலை-இலக்கிய-சமூக ஆர்வலர்களை  அங்கத்துவமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஈழத் தமிழ் சங்கமான கதிரவன் கலைக்கழகம் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் முனைவர் மா. வள்ளலார் அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக் கொண்டது.

கதிரவன் கலைக்கழகம் சார்பாக அதன் தலைவர் கதிரவன் த. இன்பராசா, பொதுச்செயலாளர் புதுவையூர் பு.தியாகதாஸ்,  பொருளாளர் சோலையூரான் ஆ. தனுஷ்கரன், துணைத் தலைவர்களான கவிஞர் ஜீ.எழில்வண்ணன் மற்றும் கவிஞர் தங்க யுவன் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.
அதேவேளை, இந்தப் பயணத்தின் போது இவர்கள் தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் சிறப்பு பட்டிமன்றங்களை நடத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்