ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர் மீதும் அன்பு , கருணை , அறிவு, பொறுமை, தியாகம் போன்ற நல்ல குணங்களை உடையவராகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்குபவராகவும் இருப்பதுடன் , புதுமையான கற்பித்தல் முறைகளைக் கொண்டு மாணவர்களுக்கு அறிவு புகட்டுபராகவும் திகழ வேண்டும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும், உளநல சமூக வலுவூட்டல் வளவாளருமான திரு. செமபாலை பிரான்சிஸ் தெரிவித்தார்.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்கள் மீது அளவற்ற அன்பும் இரக்கமும் கொண்டிருப்பதுடன் மாணவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு பொறுமையுடன் உதவும் முயற்சியுடன் செயல்பட முன்வர வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் துறையில் ஆழ்ந்த அறிவும், பொது அறிவும் பெற்றிருப்பதுடன் மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும்.
மாணவர்களின் முயற்சியை ஊக்குவித்து, அவர்களின் திறனை வளர்ப்பதுடன் மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்து, அவர்களை சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாக்க முயற்சி செய்வதோடு கற்பிக்கும் முறையை மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிய முறையில் கொண்டு செல்லல் வேண்டும்.
ஒரு ஆசிரியருக்கு நேர்மறை அணுகுமுறை, மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்தும் திறன் மற்றும் தொடர்ச்சியாக தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் குணம் போன்றன அவசியமானதாகும்.அத்துடன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
"உன்னால் முடியும்" நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் போன்ற நேர்மறை வார்த்தைகளை அடிக்கடி கூறி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் நேர்மறை சிந்தனையை அவர்களிடத்தில் உருவாக்க வேண்டும்.மாறாக எதிர்மறையான வார்த்தைகளை மாணவர்களிடம் பயன்படுத்துவதையோ உடல் ரீதியான தண்டனை வழங்குவதையோ தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது அவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர் எதிர்மறை சிந்தனையுடன் பிறழ்வாக செயற்பட ஆரம்பிப்பர்.
ஆசிரியர்கள் நகைச்சுவையுணர்வுடன் வகுப்பறையில் இருப்பது, மாணவர்களின் மனச்சோர்வு மற்றும் மன அதிருப்தி இல்லாத மனநிலையை வளர்ப்பதற்கு பயனுள்ளதாக அமைவதோடு ஒவ்வொரு மாணவரும் தமது தனிப்பட்ட தேவைகளைப் புரிந்து கொண்டு, தனித்துவமான கற்றல் செயல்முறையை தாமே உருவாக்கும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஆசிரியர் என்பவர் மாணவர்ளுக்கு பாடங்களைக் கற்பிப்பவர் மட்டுமல்ல, அவர் மாணவர்களை ஊக்குவிப்பவராகவும், ஒரு உளவளத்துணையாளராகவும் காணப்படல் வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் தமது பிரச்சினைகளை மனம்விட்டு பேசும் நிலைக்கு தம்மை மாற்றிக் கொள்வார்கள்.
கடந்தகால சிந்தனை வாழ்க்கை முறையில் இருந்து புதிய உளவியல் சிந்தனை வாழ்க்கை முறையை நோக்கி பயணிக்க வேண்டிய தேவை இன்று ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உணர்த்தப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மாணவர்களுக்கு உடல் தண்டனை மூலம் பயத்தை கொடுத்து அவர்களை குறித்த பாடங்களில் சித்திபெற வைத்ததுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்து ஒரு தொழிலை பெறும் நிலைக்கு கொண்டுவந்தும் உள்ளார்கள்.அவ்வாறுதான் நாமும் வளர்க்கப்பட்டோம்.
நாம் வளர்ந்த அந்த வளர்ச்சி முழுமையான வளர்ச்சியா என்று ஆராய்ந்து பார்த்தால் இல்லவே இல்லை. மாறாக எமக்கு பாடசாலையிவ் வழங்கப்பட்ட. உடல் தண்டனை மற்றும் ஏனைய. ஆரோக்கியமற்ற கட்டுப்பாடுகளை நேர்மறை சிந்தனைகளாக நினைத்து மறைமுக மன அழுத்தத்துடன் வாழ்ந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை என்பதை இன்று உளவியல் ஆய்வுகள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகின்றது.
இதனால் எமது எதிர்மறை சிந்தனை மூலம் நாம் மன அழுத்தத்திற்கு உள்ளானதுடன் எமது பிள்ளைகளும் இன்று இலகுவாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி பிறழ்வான செயற்பாட்டிற்கு தள்ளப்படும் நிலை அதிகரித்துள்ளது.
உளவியல் ரீதியாக ஒழுக்கம் உள்ளவர் யார் என்று நாம் பார்ப்போமாக இருந்தால் நேர்மறை சிந்தனையை நாம் கொண்டிருந்தால் நாம் ஒழுக்கம் உள்ளவரும் நேரான நடத்தையுடையவருமாக கருதப்படுவோம்.
மாறாக எதிர்மறை சிந்தனையுடன் நாம் இருந்து கொண்டு ஒருவரை நாம் நேர்மறை சிந்தனை கொண்ட ஒழுக்கமுள்ளவராக மாற்ற முயற்சித்தால் நாமும் ஒழுக்கம் இல்லாதவராக கருதப்படுவதோடு இருவருக்குமிடையில் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதுமில்லை. இதனால் பிறழ்வான நடத்தைப் பிரச்சினைகளே அதிகரிக்க அதிகமாக வாய்ப்பு உண்டு.
எனவே ஆசிரியர்கள் மாத்திரம் அல்லாது பெற்றோர் மற்றும் அனைவரும் ஒன்றுபட்டு மாணவர்களுக்கு மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் பழைய செயற்பாட்டை தவிர்த்து உளவியல் அணுகுமுறை சிந்தனைப் பயிற்சிகளை துல்லியமாக கற்று எதிர்காலத்தில் ஒழுக்கமுள்ள உளவியல் ஆளுமை மிக்க புதிய தலைமுறையினரை உருவாக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.






