நாட்டில் சிசுக்களை
கைவிட்டு செல்லும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
சட்டவிரோதமான முறையில் பிரசவிக்கப்பட்ட சிசுக்களே இவ்வாறு வீசப்பட்டு
வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மாத்தளை, பிடகந்த
தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில்,
வீசப்பட்ட புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தேனுவர காவல்துறையினருக்கு
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த சிசு மீட்கப்பட்டு மாத்தளை பொது
மருத்துவமனையில், ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, குருநாகல் - இப்பலோகம
பகுதியில் கண்டுடெடுக்கப்பட்ட சிசுவின் தாயார் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்
குறித்த தாய் நேற்றிரவு கண்டுப்பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
இப்போலோகம பகுதியில் அண்மையில்,
குடும்பநல உத்தியோகத்தர் ஒருவரது வீட்டுக்கு முன்னால் இருந்து சிசுவொன்று
கண்டெடுக்கப்பட்டது குறித்த சிசுவின் மருத்துவ அட்டையும் அங்கு காணப்பட்ட
நிலையில் தாயின் பெயர் மற்றும் ஊர் என்பன முற்றாக அழிக்கப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
குடும்பநல உத்தியோகத்தர் சிசுவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில், அக்கறைப்பற்று
பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த காவல்துறையினர் சிசுவின் தாய் மற்றும் தந்தையை கைது செய்திருந்தனர்.