மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த தயார்ப்படுத்தலுக்கான தெளிவூட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் (17) இடம்பெற்றது.
அவுஸ்ரெலியா நிதி உதவியின் கீழ் UNFPA நிறுவனத்தின் ஏற்பட்டில் மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த தயார்ப்படுத்தலுக்கான தொடர்பான தெளிவூட்டல்களை மனிதாபிமான திட்ட ஆய்வாளர் டபிள்யு. ஆர்.பி. விக்கிரம கே அவர்களினால் வழங்கப்பட்டன.
இதன் போது அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னராக கர்பிணி தாய்மார்கள், விசேட தேவைக்குரியவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டம் தொடர்பான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன.
மேலும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்குதல் மற்றும் சுகாதார வசதிகளில் பாதுகாப்பை சரிபார்த்து பலப்படுத்தல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்கும் பெண்களுக்கான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், சுகாதார துறை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள், FPA ஸ்ரீலங்கா நிறுவன சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச். இம்தியார், இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள், பொது சுகாதார மாதுக்கள், என பலர் கலந்து கொண்டனர்.
இத் திட்டதற்கு அமைவாக மாவட்டத்தில் அதிக வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்பை எதிர் நோக்கும் பிரதேச செயலகங்களான கிரான், போரதீவு, வவணதீவு போன்ற செயலக பிரிவுகளில் ஆரம்பகட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.